விஜய் தாமதமாக வந்தது ஏன்?: தவெக வழக்கறிஞர் விளக்கம் | Karur Stampede |
கரூர் அசம்பாவிதம் குறித்து தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாக தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்தார்.
கரூரில் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுத்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது :-
“கரூரில் தவெக தலைவர் விஜய் மக்களைச் சந்திக்க வந்தபோது காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யாமல், போதுமான காவலர்களை பணிக்கு அமர்த்தப்படாமல் இருந்ததால், அதை பயன்படுத்திக்கொண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவருடைய சகாக்களாலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலையைப் பின்னியுள்ளார்கள் என்பதை இந்த மனுவில் தெரிவித்துள்ளோம். இதனால் மாநில அரசாங்கத்தின் கீழ் இருக்கும் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க கூடாது, சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவற்றைக் கைப்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட தவெக தொண்டர்கள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க, உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளையும் வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். நேற்று, உயர் நீதிமன்ற நீதிபதி இன்று மதியம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்தவிதமான பதிவு அல்லது நீதித்துறை உத்தரவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் இங்கு காத்திருக்கிறோம். இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால், நாளை அல்லது வரும் வெள்ளிக்கிழமை இது விசாரணைக்கு வரும் என்று நம்புகிறோம்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடைசி நிமிடத்தில் ஏராளமான காவலர்கள் உள்ளே புகுந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதுவரை, விஜயின் எந்த நிகழ்ச்சியிலும் இதுபோன்ற காவலர்களின் தடியடி நடைபெறவில்லை. இவ்வளவு காவலர்கள் கடைசி நிமிடத்தில் உள்ளே புகுத்தப்பட்டு குழப்பத்தை உருவாக்கியது முற்றிலும் புதியது. எனவே, இந்த விவகாரத்தை மாநில அரசு விசாரிக்கக் கூடாது என்று முறையிட்டுள்ளோம். இந்த மனுவை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதல் அர்ஜுனா தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு, சதீஷ் குமார் என்ற நபர் தொடர்ந்த ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போது, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், முன்ஜாமீன் மனு அல்லது வேறு நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எங்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது. இந்தச் சம்பவத்தில் குழந்தைகளை இழந்தவர்கள், பெண்கள், முதியோர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதிவலை இருப்பதாக தமிழக வெற்றி கழகம் குற்றம் சாட்டுகிறது. இதற்கு ஆதாரமாக, உள்ளூர் மக்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் நீதி கிடைப்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபர் விசாரணை ஆணையம், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைக் கேட்கலாம். ஆனால், முழுமையான விசாரணைக்கு, காவல்துறையோ, சிறப்பு புலனாய்வுக் குழுவோ சிபிஐ போன்ற வலிமையான அமைப்போ தேவை. ஒரு நபர் ஆணையத்திற்கு காவல் விசாரணை, கைது விசாரணை போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பதை சிபிஐ மூலமே கண்டறிய முடியும். விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, செந்தில் பாலாஜி குறித்து குறிப்பிட்ட பிறகு, செருப்பு வீசப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட செயல் என்று நம்பப்படுகிறது. கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் அல்லது விஜயைப் பார்க்க வந்தவர்கள் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம், எங்கிருந்து செருப்பு வீசப்பட்டது என்பது குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இந்தச் சதிவலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கிய ஒரு மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. இவ்வளவு பெரிய மரண ஓலத்திற்குப் பிறகும், இதில் அரசியல் செய்ய நினைப்பது மனிதத்தன்மையற்ற செயல். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ள இந்தச் சம்பவத்தில், உண்மையான காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கரூரில் மட்டும் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டதற்கு என்ன காரணம்? பல ஊடகங்கள், கரூரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்று முன்கூட்டியே எச்சரித்திருந்தன. இதற்கு யார் காரணம்? உள்ளூர் மக்கள் மற்றும் ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நபரைத்தான் குற்றம் சாட்டுகின்றனர். இதை காவல்துறையோ அல்லது சிபிஐயோ விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும். இதற்காகவே இந்த மனுவைத் தாக்கல் செய்கிறோம்.
நேற்று ஒரு காவல்துறை அதிகாரி, கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கேயே பேசச் சொன்னதாகக் கூறினார். ஆனால், மக்கள் எளிதாகச் செல்லக்கூடிய இடத்தைத் தேர்ந்தெடுத்து, போதுமான இடவசதி கேட்டபோது, அவர்கள் அதை மறுத்து, இந்த இடத்தை மட்டுமே வழங்க முடியும் என்று ஒரு நாளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டனர். இது ஊடகங்களில் வெளியான செய்தி. இப்போது, சம்பவம் நடந்த பிறகு, “நாங்கள் இப்படிச் செய்தோம், அப்படிச் சொன்னோம்” என்று கூறுவது, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாக உள்ளது. உளவுத்துறைக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. ஒரு தலைவர் வருகிறார் என்றால், கூட்டம் கூடும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்படியிருக்க, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. இந்தக் கடமையில் அவர்கள் தவறிவிட்டனர். இது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் கூடும்போது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பு. ஆனால், இதில் அவர்கள் பொறுப்பு தவறிவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரை நிகழ்ச்சிகளில், காவல்துறையின் நிபந்தனைகளை நாங்கள் ஒருபோதும் மீறவில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி ஆகியவை எங்கள் தரப்பிலிருந்து முறையாக வழங்கப்பட்டன. உதாரணமாக, மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், 2 லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, 10 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. ஒவ்வொரு இடத்திலும், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளூர் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கியுள்ளனர். இதுதான் உண்மை.
ஆனால், கரூரில், மரத்திலிருந்து விழுந்ததால் 11 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் முதல் தகவல் அறிக்கை தவறானது. உண்மையில், காவல்துறை தடியடி நடத்தப்பட்டபோது, அங்கு ஒரு வடிகால் இருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், நான்கு மணி நேரம் தாமதமாகத் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனந்த் மற்றும் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டும், அவர்கள் கேட்கவில்லை என்றும், தண்ணீர், மருத்துவ வசதி எதுவும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் அழுத்தம் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. மரத்திலிருந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறுவது தவறு.
மரத்திலிருந்து விழுந்ததாகக் கூறப்பட்டால், ஏன் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இரவோடு இரவாக உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன? விசாரணை அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டதா? மரத்திலிருந்து விழுவதற்கும், கூட்ட நெரிசலில் குழியில் விழுவதற்கும், காவலர்கள் தடியடி காரணமாக விழுவதற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. இதுவரை, பிரேத பரிசோதனை அறிக்கைகள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இவை கிடைத்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்வோம்.
இந்தச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களா, அல்லது இதில் முரண்பாடுகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இறந்தவர்களின் உறவினர்களை அடையாளம் காணவோ, உரிய விசாரணை அறிக்கை தயாரிக்கவோ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இறந்தவர்கள் உண்மையாகவே இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களா, அல்லது மருத்துவமனைகளில் ஏற்கனவே இறந்தவர்களை இதில் சேர்த்து ஒரு கணக்கு காட்டப்பட்டதா? இதில் பல சந்தேகங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஆதல் அர்ஜுனா அவர்கள் தனது மனுவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கு உரிய பதில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். விஜயின் வாகனம் வேகமாக வந்திருந்தால் அதன் பின்னால் வந்திருந்த இளைஞர்களுக்கு விபத்துகள் ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகவே விஜய் மெதுவாக வந்தார். அதை ஒரு பிரச்னையாக ஆக்கக் கூடாது.”
இவ்வாறு பேசினார்.