
கரூர் அசம்பாவிதம் குறித்து தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாக தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ல் விஜயின் பரப்புரையைக் காண வந்த பலரும் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுத்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கரூர் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோல் தெரிகிறது எனவே சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று மதியம் 2 மணி அளவில் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது :-
“நேற்றே உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பொறுப்பு நீதிபதியின் இல்லத்திற்குச் சென்று மனு கொடுத்தோம். சம்பவம் தொடர்பான சிசிடிவி தடயங்களை அழிக்கும் வேலை நடக்கிறது. அப்பகுதியில் காவலர்கள் தடியடி நடத்தியுள்ளார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டது உள்ளிட்டவற்றை தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் காலையில் மனுத்தாக்கல் செய்யுங்கள், மதியம் விசாரிக்கிறேன் என்று கூறினார். அதன் அடிப்படையில் ஆவணங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பரப்புரையின் போது மக்கள் பாதிக்கப்பட்டதற்குப் பின்னால் இருக்கும் சதி வேலை என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மிகப்பெரும் சதி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதே தவெகவின் குற்றச்சாட்டு. அதைத்தான் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள பொதுமக்களும், கட்சிக்காரர்களும் கூறுகிறார்கள். அதற்கான ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பதே முதல் தேவை. அதன் பிறகுதான் எங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் முன் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க விஜய் வருவதற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள்களாக உள்ளதால், நீதிமன்றம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு குறித்த உத்தரவு வழங்கப்பட்ட பிறகு தெரியப்படுத்தப்படும். இன்று ஒருவேளை மனு விசாரிக்காமல் இருந்தால், நாளையோ வெள்ளிக்கிழமையோ மனு விசாரிக்கப்படும் என்று நம்புகிறோம்”.
இவ்வாறு பேசினார்.