
TVK Maanaadu in Madurai: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தவெகவின் முதல் மாநில மாநாடு கடந்தாண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் நிலைபாடு, கொள்கைத் தலைவர்களின் பெயர்கள், கட்சி பாடல் ஆகியவற்றை விஜய் வெளியிட்டார்.
இந்நிலையில், 2-வது மாநில மாநாடு தொடர்பாக விஜய் இன்று (ஜூலை 16) வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது,
`என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்’ என்றார்.
தவெகவின் மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 25-ம் தேதி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த தினமாகும். அத்துடன் அந்த தினம் விஜயின் திருமண நாளும் ஆகும். கடந்த ஆகஸ்ட் 25, 1999-ல் சென்னையில் வைத்து சங்கீதாவை கரம் பிடித்தார் விஜய்.
இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் 2-வது மாநில மாநாட்டின் பந்தக்கால் நடும் விழா இன்று (ஜூலை 16) காலை, மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தியில் நடைபெற்றது.
திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம், பாஜக தொடர்புடைய முருக பக்தர்கள் மாநாடு ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மதுரையை மையமாக வைத்து தவெகவின் 2-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது பேசுபொருளாகியுள்ளது.