
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் முன்பு தெரிவித்த தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், அது தொடர்பான புதிய விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகிவந்த அம்ரித் பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை, கடந்த ஜனவரி 10-ம் தேதி ஆய்வு செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ். இதனைத் தொடர்ந்து ஐ.சி.எஃப். வளாகத்தில் வைத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, மத்திய ரயில்வே அமைச்சகத்தால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனப் பேசினார் அஷ்விணி வைஷ்ணவ். அதைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மதுரை-தூத்துக்குடி திட்டத்தைக் கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியிருந்ததால், அது நிறுத்தப்பட்டதாக பதிலளித்தார் அஷ்விணி வைஷ்ணவ். மத்திய அமைச்சரின் இந்த தகவலுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்காக நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த திட்டத்தை கைவிடக்கோரி கடிதம் வழியாகவோ, வாய்மொழியாகவோ ரயில்வே அமைச்சகத்திற்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும், அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை மத்திய அமைச்சர் கூறுவதாகவும், சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான புதிய விளக்கத்தை அளித்துள்ளார் அஷ்விணி வைஷ்ணவ்.
`சென்னை ஐ.சி.எஃப்.பில் அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆலையின் இரைச்சல் காரணமாக கேள்வியைச் சரியாகக் கேட்க முடியவில்லை எனவும், இதனால் தூத்துக்குடி தொடர்பான கேள்வியை தனுஷ்கோடி எனத் தவறாக புரிந்துகொண்டதாகவும், தனுஷ்கோடி திட்டத்தைக் கைவிட தமிழக அரசு கோரியதாகவும், மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் எந்தக் குழப்பமும் இல்லை’ எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.