
நான் வேறு, நீங்கள் வேறு என்று பிரிக்க நான் விரும்பவில்லை, இது நமக்குக் கிடைத்துள்ள வெற்றி என டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்து பாராட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் வகையில், வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்தது.
தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமமும் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்திக் கடந்த டிச.9-ல் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேறியது.
தொடர்ந்து, மதுரை மாவட்டத்தின் அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் மத்திய சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டியைச் சந்தித்தார்கள். இதன்பிறகு, டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும், முக்கியஸ்தர்களும் ஜனவரி 25 அன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்கள். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
மதுரையில் நடைபெறும் பாராட்டு விழாவுக்கு நேரில் வருமாறும் முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று மாலை மதுரை சென்றார் முதல்வர் ஸ்டாலின். முதலில் அரிட்டாப்பட்டி கிராமத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "எனக்கு நன்றி தெரிவிப்பதைவிட, மக்களாகிய உங்களுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். நான் வேறு, நீங்கள் வேறு என்று பிரிக்க நான் விரும்பவில்லை. இது நமக்குக் கிடைத்துள்ள வெற்றி. அது தான் உண்மை. நாங்கள் என்றும் உங்களுடன் துணை நிற்போம். எதைப் பற்றியும் கவலை வேண்டாம்" என்று பேசினார்.
தொடர்ந்து, வல்லாளப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், "இந்த விழாவைப் பொறுத்தவரையில் எனக்கானப் பாராட்டு விழாவாக நினைக்கவில்லை. உங்களுக்கானப் பாராட்டு விழாவாகக் கருதுகிறேன். நீங்கள் உறுதியாக நின்று, குரல் கொடுத்தது மட்டுமல்ல உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளீர்கள், போராட்டத்தை நடத்தியுள்ளீர்கள். ஆகவே, உங்களுக்கு தான் என்னுடையப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஒன்றிய பாஜக அரசைப் பொறுத்தவரை டங்ஸ்டன் சுரங்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஆனால், இன்று மக்கள் சக்தியோடு அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். அதற்கான மகிழ்ச்சிமிக்க வெற்றி விழாவாக இது அமைந்துள்ளது. உங்களுடைய மகிழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உங்களை நோக்கி நான் வந்துள்ளேன்" என்று முதல்வர் உரையாற்றினார்.
முன்னதாக, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது பதிவான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தல்லாகுளம், மேலூர் காவல் நிலையங்களில் 11,608 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.