
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துத் திரும்பிய எடப்பாடி பழனிசாமியை முகமூடியார் பழனிசாமி என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சந்திப்பு குறித்து பேசினார்.
டிடிவி தினகரன் கூறியதாவது:
"செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி எப்படி எல்லாம் வீரவசனம் பேசினார். "நான் தன்மானம் மிக்கவன். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் எல்லாம் முக்கியம் இல்லை. வெற்றி, தோல்வி எல்லாம் பெருசு இல்லை. எங்களுக்கு தன்மானம் தான் முக்கியம் என்று" பயங்கரமாகப் பேசினார்.
மழை பெய்கிறது என்பதால், தனது பயணத்தைத் தள்ளிவைத்திருப்பதாகக் கதையெல்லாம்விட்டு, தில்லிக்குச் சென்றிருக்கிறார். தில்லியில் குடியரசு துணைத் தலைவரைச் சந்தித்துக்கொண்டு, இரவில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உள்துறை அமைச்சர் அழைத்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி தில்லி செல்கிறார் என்று ஏற்கெனவே ஊடகங்களில் செய்தி வந்துவிட்டது.
இப்படியெல்லாம் பொய் சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி? தமிழ்நாட்டு மக்களையும் மற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களையும் இனிமேலும் பழனிசாமியால் ஏமாற்ற முடியாது.
உள்துறை அமைச்சரைச் சந்தித்துள்ளீர்கள். கூட்டணியில் உள்ளீர்கள். உள்துறை அமைச்சர் ஏப்ரல் 11-ல் சென்னையில் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியைக் கூட்டணியில் சேர்த்து அறிவித்துவிட்டு தில்லி செல்கிறார்.
உள்துறை அமைச்சரைச் சந்தித்துவிட்டு வெளியில் வரும்போது, முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? தில்லி சென்றுவிட்டு வரும்போதோ அல்லது வேறு எங்கோ கூட்டணிக் கட்சித் தலைவரைச் சந்தித்துவிட்டு வரும்போது இப்படி முகத்தை மூடிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கீங்களா? யார் இப்படி முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவருக்கு அருகிலிருந்தது அவருடைய அன்பு மகன் என்பது ஊடகங்கள் மூலம் தான் தெரியவந்தது. இருவரும் எதற்காக முகத்தை மூடிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்குப் பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும்.
எனக்குச் சொல்லப்பட்டது, உடன் வந்த சகாக்களை முன்னாடி அனுப்பிவிட்டு, இவர் மெதுவாக வெளியில் வந்துள்ளார். என்ன காரணம் என்பதை பழனிசாமி தான் சொல்ல வேண்டும். பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்று தான் அழைக்க வேண்டும்.
நல்ல வேலை முகமூடி கொள்ளையரைப்போல வரவில்லை. இதுதான் பழனிசாமியின் நடத்தை, இதுதான் அவருடைய குணாதிசயம். தமிழ்நாட்டு மக்கள் இனி அவரிடம் ஏமாற மாட்டார்கள். அங்க உள்ள நமது தொண்டர்கள், நமது சகோதர சகோதரிகள் இன்னும் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
இன்னொன்று சொல்றேன். எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கத்தில் தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி. அதைதான் ஜெயலலிதாவும் பின்பற்றினார்கள். அந்த அடிப்படை விதியையே மாற்றியதால், இனி அந்த கட்சியின் பெயர் அண்ணா திமுக கிடையாது. அது எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம். அது எடப்பாடி கட்சி என்று தான் சொல்ல வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இப்பொழுது இல்லை.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போற்றி காத்த அந்த வெற்றிச் சின்னமான இரட்டை இலையை வைத்துக்கொண்டு, தொண்டர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றப் பார்க்கிறார் பழனிசாமி. இந்தத் தேர்தலில், என்னதான் பணபலம் இருந்தாலும், எத்தனைக் கட்சிகள் கூட்டணி வந்தாலும், பழனிசாமி தோல்வியைச் சந்திக்கப்போவது உறுதி" என்றார் டிடிவி தினகரன்.
TTV Dhinakaran | Edappadi Palaniswami | Amit Shah | ADMK | AMMK | BJP |