
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தஞ்சையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
”கரூரில் நடந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றல்ல, மாறாக ஒரு விபத்து என்றே கருத வேண்டும். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், தங்கள் தலைவர் வரும்போது அதிகமான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இதைச் செய்திருக்கின்றார்கள். இருப்பினும், அனுபவக் குறைவால், இவ்வளவு பெரிய கூட்டம் கூடிய இடத்தில் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய மறந்திருக்கலாம். பொதுவாக, நாம் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தும்போது, வெயில் நேரமாக இருந்தாலும், குடிக்க தண்ணீர், பிஸ்கட்டுகள் போன்றவற்றை வழங்குவோம். ஆனால், இவர்களுக்கு அது தெரியாமல் இருந்திருக்கலாம். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூற முடியும்.
விஜய் இந்த விபத்தைக் கண்டு மனமுடைந்து போயிருப்பார். முதலமைச்சர் கூறியதைப் போல, எந்தத் தலைவரும் தங்கள் கட்சித் தொண்டர்களோ, நிர்வாகிகளோ உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்; அதை ஏற்கவும் மாட்டார்கள். ஆனால், அவர் இதற்குத் தார்மீக பொறுப்பை ஏற்றிருந்தால், நீதிமன்றம் இவ்வளவு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்காது. ஒருவேளை, தனது ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ, பழி தன்மீது வந்துவிடுமோ என்று கூறியதால், அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். அவரை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். கட்சித் தலைவராக தார்மீக பொறுப்பை ஏற்றிருந்தால், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இவ்வளவு தூரம் சென்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கும் அளவுக்கு வந்திருக்காது.
இந்த சம்பவத்தில் பல தலைவர்கள் பேசியிருக்கின்றனர். நண்பர் சீமான், உணர்ச்சிவசப்படுபவர் என்றாலும், இந்த விவகாரத்தில் முதல் நாளிலிருந்து இன்று வரை மிகவும் சரியாகவே பேசியிருக்கிறார். ஆனால், எடப்பாடிபழனிச்சாமி, நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து, அதிகாரத்தின் சுவையை அனுபவித்தவர், மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்ற வெறியில், ஆளுங்கட்சியே இதற்குக் காரணம் என்றும், இதில் சதி இருப்பதாகவும் பேசுகிறார். இது வீடு எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்பது போன்ற செயல். கடந்த சனிக்கிழமை வரை உயிருடன் இருந்த 41 பேர், இன்று உயிரிழந்து விட்டனர். இதைப் பொருட்படுத்தாமல், பழனிச்சாமி தனது வழக்கமான அநாகரிகமான நடவடிக்கைகளைத் தொடர்கிறார். இந்த நேரத்தில் கூட்டணி பற்றி பேசுவது சரியானதா?
விஜய் இந்த நேரத்தில் கூட்டணி பற்றி பேசுவாரா? இத்தனை பேர் உயிரிழந்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கும் இந்த நேரத்தில், எந்தத் தலைவரும் கூட்டணி பற்றி பேச மாட்டார்கள். ஆனால், பழனிச்சாமி, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில், எப்படியாவது கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்று பேசுகிறார். அவரது இந்த நடவடிக்கைகள், அமுகவின் தொண்டர்களால் கவனிக்கப்படுகின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் உயிரிழந்தபோது, அவர் உடனடியாக அங்கு செல்லவில்லை; பயந்து, பல நாட்கள் கழித்தே சென்றார். ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாகச் சென்று நடவடிக்கை எடுத்தார்.
இந்த விவகாரத்தை அரசியலாக்குவது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு வேதனையை அளிக்கும்? கூட்ட நெரிசலால், தண்ணீர் இல்லாததால் மயக்கமடைந்து, மிதிபட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. கடந்த ஒரு வாரமாக இதை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுங்கட்சியைக் குறை கூறுவது வேறு; ஆனால், ஆளுங்கட்சியே இதற்குக் காரணம் என்று கூறுவது தரமற்ற அரசியலாகும்.
எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக பாஜகவும் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. கரூருக்கு விரைந்து வந்த உண்மை அறியும் குழு ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது வரவில்லை?
முதலமைச்சர் இந்த விவகாரத்தில் மிகுந்த பொறுமையுடனும் பெருந்தன்மையுடனும் செயல்பட்டுள்ளார். நண்பர் திருமாவளவன், பொதுவாக ஆக்ரோஷமாகப் பேசாதவர் என்றாலும், இந்த விவகாரத்தில் வலியவர்களுக்கு ஒரு நீதி, எளியவர்களுக்கு வேறொரு நீதியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தபோதும், நீதிமன்றம் ஏன் நடவடிக்கை எடுத்தது என்று கேட்டபோதும், அவர் மிகவும் நிதானமாகவே பதிலளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், முதலமைச்சர் இதில் பொறுமையாகவே நடந்து கொண்டார். காவல்துறைக்கு இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாதா? இருப்பினும், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் சென்று ஜாமீன் பெற்று, பெருந்தன்மையாக நடந்து கொள்வதாகவே தோன்றுகிறது.
இந்த விவகாரத்தில் ஆளும் அரசு மிகவும் சரியாக செயல்பட்டு வருவதாகவும், காவல்துறையும் திறமையாக செயல்படுவதாகவும் பலர் கருதுகின்றனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான திருமதி அமுதா, தனது நற்பெயருக்கு ஏற்ப, இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கங்களை அளித்து வருகிறார். அவர் இதில் ஈடுபட்டு, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுவது, எந்தவித தவறும் நடக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அதேபோல, கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் போன்றவர்கள், எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிறந்த நிர்வாகிகளாக உள்ளனர். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களும், ஆட்சிகள் மாறினாலும், தங்கள் திறமையால் முக்கிய பதவிகளில் நீடிக்கின்றனர். அமுதா ஐஏஎஸ் நேர்மையான, சிறந்த அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அதிகாரிகள், ஏதேனும் தவறு நடந்திருந்தால், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி, விளக்கம் அளிக்க முன்வர மாட்டார்கள்.
இந்த சம்பவத்தில் அரசு முதல் நாளிலிருந்து சரியாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சருக்கு யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால், இரண்டு மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த கைதுகள் பெரிய தீர்வை ஏற்படுத்திவிடாது. மாவட்ட செயலாளர்களின் நோக்கம் தவறாக இருக்கவில்லை; ஆர்வக் கோளாறே இதற்குக் காரணம். எதிர்காலத்தில், எந்தக் கட்சியாக இருந்தாலும், இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க, சரியான நடைமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த சம்பவம் நடந்தது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இது தவறான புரிதல். பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன; மயக்கமடைந்தவர்களும் உள்ளனர். காவல்துறை, விழுப்புரம், மதுரை, திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடந்த கூட்டங்களில் காயமடைந்தவர்கள் குறித்த பட்டியலை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் ஒரு விபத்து என்றே கருத வேண்டும். இதில் யாரையும் குற்றம் சொல்வது பயனளிக்காது. முன்னாள் அமைச்சரை குறை கூறுவது, அரசியல் புதியவர்கள் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதை திசைதிருப்புவதாக பேசுவது, நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
அதிகாரிகள் இந்த விவகாரத்தை திறமையாக கையாண்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக பேட்டி அளித்தார். அவருக்கு அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருக்கலாம்; ஆனால், இதுபோன்ற சம்பவங்களால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து சரியான திட்டமிடலுடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதிமுகவைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையைத் தவிர வேறு யாராக இருந்தாலும், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதிமுக இப்போது எடப்பாடி திமுகவாக மாறிவிட்டது. அம்மாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், எடப்பாடி தலைமையில் அது சாத்தியமில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்து வருகின்றனர். கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவெடுக்கப்படும். எங்கள் கட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது”
என்று கூறினார்.