ஈபிஎஸ்ஸைக் காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்கள், பாஜக அல்ல: டிடிவி தினகரன் | TTV Dhinakaran | EPS |

கூவத்தூரில் நடந்தது இதுதான் என உடைத்துப் பேசிய டிடிவி தினகரன்...
ஈபிஎஸ்ஸைக் காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்கள், பாஜக அல்ல: டிடிவி தினகரன் | TTV Dhinakaran | EPS |
ANI
1 min read

அதிமுகவைக் காப்பாற்றியது பாஜக தான் என எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், அவரைக் காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்கள் தான் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -

”நன்றி மறப்பது நல்லதல்ல என்று எடப்பாடி பழனிசாமி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. தமிழக மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நன்றி பற்றி பேசுபவர் யார்? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிச்சாமி பேசுகிறார். அவர் பேசுவதில் உண்மையில் என்ன இருக்கிறது?

ஜெயலலிதாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றபோது பாஜக வந்து காப்பாற்றியதாக பழனிசாமி கூறுகிறார். ஆனால், அது தவறு என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். அவரை மாற்றுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை நிகழ்த்தினார். பின்னர், திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

அதை எதிர்கொள்ள சசிகலா தலைமையில் கூவத்தூரில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது அவர், “நான் முதலமைச்சர் வேட்பாளர் என்று முன்கூட்டியே சொல்ல வேண்டாம், பலர் கையெழுத்து இடமாட்டார்கள்” என்று கூறினார். பின்னர், வாக்கெடுப்பில் திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும்போது, 122 எம்.எல்.ஏக்கள்தான் எடப்பாடி பழனிசாமியைக் காப்பாறினர். அவர் பாஜகவால் காப்பாற்றப்படவில்லை.

பின்னர் என்னைக் கட்சியில் இருந்து நீக்கினார். அப்போது பாஜக அழுத்தத்தால்தான் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதன் பின்னர் தனக்கு ஆதரவாக வாக்களித்த 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்தார். ஆகவே நன்றிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியது இதே பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வென்று முதல்வர் ஆனவரா? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று பேசிய எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி சென்று ஆதரவு தேட வேண்டிய அவசியம் என்ன? கடந்த மார்ச்சில் அதிமுக கட்டடத்தைப் பார்வையிடப் போவதாகக் கூறிவிட்டு, திருட்டுத் தனமாக அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி”

இவ்வாறு பேசினார்.

TTV Dhinakaran | Edappadi Palaniswami | Jayalalitha | ADMK | AMMK |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in