

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியில்லை, அவரது அழிவை அவரே தேடிக் கொள்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 5 அன்று, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அதனால் அவரை அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 30 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து வந்து மரியாதை செலுத்தினார். இதனால், கட்சித் தலைமையின் உத்தரவுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டு செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி, நேற்று (அக்.31) எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், செங்கோட்டையனை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதி இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
”வினாச காலே விபரீத புத்தி என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். கொள்ளிக் கட்டையைத் தலையைச் சொரிந்துகொள்வது போல் எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் அதிமுகவின் மிக மூத்த நிர்வாகி. எம்ஜிஆர் காலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணிக்குப் பலம் சேர்த்தவர். விசுவாசி, தீவிரமான தொண்டர், திறமையான நிர்வாகி, கிளைச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பதவி வரை உயர்ந்தவர். அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு வருத்தப்படக் கூடிய நபர் இல்லை. ஏனென்றால் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியே அங்கு இல்லை. எடப்பாடி திமுகதான் உள்ளது.
ஜெயலலிதா இருந்தபோது எப்படி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாரோ அதேபோல் வர வேண்டும் என்ற நினைப்பில் இந்த ஆண்டும் செங்கோட்டையன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வந்தார். அவர் அங்கு அரசியலுக்காக வரவில்லை.
செங்கோட்டையனை நீக்கும் அளவு எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதி இல்லை. அதிமுகவின் அழிவை எடப்பாடி பழனிசாமியே தேடிக் கொள்கிறார். நாங்கள் வீழ்த்த வேண்டும் என்ற தேவையில்லாமல் அவரே அவரது அழிவைத் தேடிக் கொள்கிறார்” என்றார்.