

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணிக்குச் செல்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அநீதிக்கு எதிராக உருவான கட்சி அமமுக
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-
“தமிழ்நாட்டு மக்களின் நலன்கருதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் குறித்த தீர்மானம் எந்தக் கட்சிக்கும், அமைப்புக்கும் எதிராக நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டின் அமைதி கெட்டுவிடக் கூடாது என்பதால் தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நமக்கு இழைக்கப்பட்ட நீதிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அமமுக. இந்தக் கட்சி இடம்பெறப்போகும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் வெற்றிக் கூட்டணியாக ஆட்சி அமைக்கப்போகிறது. அதற்கெல்லாம் காரணம் இங்கே வந்திருக்கிற, நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிற லட்சக்கணக்கான தொண்டர்கள்தான்.
2024 தேர்தலில் தோற்க காரணம்
யாரோடும் சமரசம் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதே அமமுகவின் லட்சியம். தேர்தல் வெற்றி-தோல்வி கடந்து செயல்படுகிற இயக்கம் அமமுக. கடந்த 2021-ல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் ஆட்சியை கோட்டை விட்டுவிட்டார்கள். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறாததற்கு காரணம், ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற எனது முடிவால்தான்.
2026-ல் அமமுக ஆளுங்கட்சி
இந்த தேர்தலில் அமமுக சட்டமன்றத்திற்குள் ஆளும் கட்சியாகச் செல்ல உள்ளது. இந்தத் தேர்தலில் அமமுக கை காட்டுபவர் தான் முதல்வராக வர முடியும். தேர்தல் நேரத்தில் யார் எதிரி? யார் துரோகி? யார் நண்பன்? என்பதெல்லாம் என் கண்ணுக்குத் தெரியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த ஆட்சி அமைந்தால் நல்லதோ அதைச் செய்திட என் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை கொடுத்துள்ளீர்கள்.
தேர்தலில் யாருடன் கூட்டணி?
உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கௌரவமான இடங்களைப் பெற்று ஆட்சிக் கூட்டணியில் ஆட்சி அமைப்போம். ஆட்சி அதிகாரத்திலே பங்கு தருகின்ற கூட்டணிக்குதான் நாம் செல்ல இருக்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்ற தொகுதிகளும், நம் கூட்டணி வெற்றிக்காகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். முடிவு எடுக்க இன்னும் 30 நாள்கள் உள்ளன. நல்ல முடிவு எடுப்போம்” என்றார்.
TTV Dhinakaran has said that we will go for an alliance that will share ruling power in Tamil Nadu.