

விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக நான் சொன்னேனே தவிற விஜய்யுடன் நாங்கள் கூட்டணிக்குச் செல்வோம் என்று கூறவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
”விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக நான் சொன்னேனே தவிற விஜய்யுடன் நாங்கள் கூட்டணிக்குச் செல்வோம் என்று கூறவில்லை. ஒருமுறை மதுரையில் நானும் ஓபிஎஸ்ஸும் விஜய்யுடன் கூட்டணிக்குச் செல்வீர்களா என்று கேட்கப்பட்டபோது அரசியலில் அனுபவம் என்பதை விட மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். விஜய் தீண்டத்தகாதவர் அல்ல என்றுதான் கூறினேன். உடனே விஜயுடன் அமமுக கூட்டணியா என்று கேட்கிறீர்கள். அதேபோல் கரூர் சம்பவத்தைப் பற்றி நான் பேசியபோது முதல்வரின் நடவடிக்கைகளை நான் பாராட்டியதும் அமமுக திமுக கூட்டணியா என்று கேட்டீர்கள்.
எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த இயக்கம் இன்று இல்லை. அதிமுக எடப்பாடி திமுகவாக மாற்றப்பட்ட பின் அவர்தான் கூட்டணிக்குத் தேடி, பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கத்துகிறார். அதைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் நகைக்கிறார்கள். தன் தலைமையில் கட்சி இந்தத் தேர்தலில் உறுதியாக வெற்றிபெறாது என்று எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்துவிட்டது. அதனால் விஜய் தலைமையை ஏற்றுக்கொள்ளத் தயாராகித்தான் விஜய் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இப்படிப் பேசுகிறார் என்று எல்லாரும் சொல்கிறார்கள்.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிகள் இறுதி செய்யப்படும். அமமுக இடம்பெறும் கூட்டணிதான் தேர்தலில் வெற்றிபெறும். அமமுக இடம்பெறும் கூட்டணி எடப்பாடி பழனிசாமியைத் தேர்தலில் வீழ்த்தும். விஜய் தன் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று விக்ரவாண்டியிலேயே கூறிவிட்டார். அப்படிப்பட்ட உச்ச நடிகர் கல்லாப்பெட்டி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகத் தோளில் தூக்கிக் கொண்டு அலைவாரா? நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் அது விஜய்க்கு அரசியல் தற்கொலைக்குச் சமம்.” என்று கூறினார்.
TTV Dhinakaran says Vijay won't carry EPS on his shoulders to make him CM.