
தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“ தேர்தல் வருவதால் ஏதாவது பேசி ஆக வேண்டுமே என்றதால் எடப்பாடி பழனிசாமி திமுக உருட்டு கடை அல்வா என்றெல்லாம் பேசுகிறார். அதற்கு அமைச்சர்கள் கொடுக்கும் பதிலும் வேடிக்கையாக இருக்கிறது. விஜயின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்று சொல்ல நான் என்ன ஜோசியரா?
கூட்டணி விவகாரம் குறித்து பொறுமையாக இருக்க வேண்டும். யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. மே மாதத்தில் மக்கள் உரிய பதிலைக் கொடுப்பார்கள். நாங்கள் கூட்டணிக்குச் செல்கிறோமா, எங்கள் தலைமையில் கூட்டணி அமைகிறதா என்பதெல்லாம் பொங்கல் பண்டிகையின்போது தெரியவரும்.
தமிழ்நாட்டில் என்னதான் கல்வி வளர்ந்திருந்தாலும் பெரியார் புகட்டிய நீதிகள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடக்கத்தான் செய்கின்றன. அதற்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து சட்டம் இயற்றப்படுவது வரவேற்கத்தக்கது.
தவெக புதிய கட்சி. எங்களை விமர்சிப்பவர்களை நாங்கள் விமர்சிக்காமல் விடமாட்டோம். அதே நேரத்தில் இன்னொரு கட்சியை விமர்சிப்பது எனது பழக்கமில்லை. எனக்குத் தெரிந்தவரை விஜய் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். அதில் யாரெல்லாம் கூடப் போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும். இப்போது தமிழ்நாட்டில் நான்கு கூட்டணிகளுக்கு இடையில் நான்கு முனைப் போட்டிதான் நடக்கும். ஒன்று திமுக கூட்டணி, மற்றொன்று பாஜக தலைமையிலான கூட்டணி, விஜய் தலைமையிலான கூட்டணி மற்றும் தனித்து நிற்கும் சீமான் ஆகியோருக்கு இடையில்தான் போட்டி உருவாகும். இதைக் கடந்து எதிர்பாராத கூட்டணிகள் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றார்.