

தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியின் கூட்டணிக்கும் தவெகவின் கூட்டணிக்கும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகர் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது என்றாலும் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பது திமுகதான். தமிழ்நாட்டைச் சேர்ந்த அலுவலர்கள்தான் நடத்துகிறார்கள். எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கவனத்துடன் கண்காணித்தால் தேர்தல் ஆணையமோ வேறு யாரோ என்ன செய்துவிட முடியும்?
அமமுகவை ஆரம்பித்ததே எடப்பாடி பழனிசாமியின் துரோகத்திற்கு எதிராகத்தான். அதனால் அவர் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையே கிடையாது. அவருடன் நாங்கள் சேர விரும்பவில்லை. டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் எங்கள் கூட்டணி நிலைப்பாடு தெரியும். ஆனால் அதற்குள் தவெக கூட்டணிக்கு அமமுக அழைப்பு விடுத்து வருவதாக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். நாங்கள் இதுவரை எந்தக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் எங்களுடன் கூட்டணிக்காகச் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அது விரைவில் தெரியப்படுத்தப்படும். அமமுகவைத் தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வர முடியாது.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக்கும்தான் கடுமையான போட்டி இருக்கும். இதை அந்தக் கட்சியுடன் கூட்டணி ஏற்பட வேண்டும் என்ற சமிக்ஞைக்காகச் சொல்லவில்லை. நாட்டு நடப்புகளைப் பார்த்து, கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் ஒரு நடுநிலையாளனாக இதைச் சொல்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். எங்களைச் சந்திப்பதற்கே அவருக்கு உறுதியாகத் தயக்கம் இருக்கும். அதனால் அவரது கட்சியுடன் இணைந்து போட்டியிட வாய்ப்பே இல்லை என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்களிடம் ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். 2021-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்களுக்கு மதிப்பு கொடுத்து, எங்களுக்கு 40 தொகுதிகளைக் கொடுத்தால் கூட்டணியில் இணைகிறேன் என்று கூறினேன். அப்போதும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டேன். அதனால் அப்போது கூட்டணியில் சேருவதற்உச் சென்றேனே இப்போது ஏன் இல்லை என்று கேட்கக் கூடாது.
தவெகவுக்கு அரசியல் வரலாறு இல்லை என்று உதயநிதி பேசுகிறார். 1949-ல் திமுகவுக்கு மட்டும் என்ன வரலாறு இருந்தது? அன்று அண்ணா கட்சியைத் தொடங்கிவிட்டதனால் இன்று உதயநிதி இப்படிப் பேசுகிறார். இது தவெகவைப் பார்த்துத் திமுகவுக்கு ஏதோ உறுத்தல் இருப்பது போலத்தான் தெரிகிறது” என்றார்.
AMMK General Secretary TTV Dhinakaran has stated that in the 2026 Tamil Nadu elections, there will be a fierce contest only between the DMK alliance and the TVK alliance.