நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |

செங்கோட்டையனை பொறுப்பிலிருந்து நீக்கியது அதிமுகவுக்குத்தான் பின்னடைவு என்றும் பேச்சு...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

அண்ணாமலை இருந்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியைச் சரியாகக் கையாண்டார் என்றும் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இதையடுத்து கடந்த செப்டம்பர் 3 அன்று கூட்டணியில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகியது ஏன் என்பதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது - நாடாளுமன்ற தேர்தலில் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். நான் கூட்டணியிலிருந்து வெளியேறியது நிதானமாக எடுக்கப்பட்ட முடிவுதான். இதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவே காரணம். அண்ணாமலை இருந்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சரியாகக் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்குக் கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆணவமாக பதிலளித்தார். பாஜக கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் வெளியேறியதற்கும் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் காரணம்.

அமமுக வேண்டுமா? வேண்டாமா? என்பதை அதிமுகவும் பாஜகவும்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும். அமமுகவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் சாதகமான நிலை உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு வாழ்த்துகள். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பரில் அறிவிக்கப்படும்” இவ்வாறு கூறினார்.

விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு - “தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்புண்டு. அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜய் தலைமையை ஏன் ஏற்கக் கூடாது? அவர் என்ன தீண்டத்தகாதவரா? யாரையும் எந்தக் கட்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று பேசினார்.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது - ”செங்கோட்டையன் நீண்ட காலமாக விசுவாசத்தோடு பணியாற்றினார். அவரைப் போன்ற அதிமுகவின் மூத்த நிர்வாகியை பதவியில் இருந்து நீக்குவது நல்லதல்ல. கெடுவான் கேடு நினைப்பான் என்று சொல்வார்கள். செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியது அவருக்குப் பின்னடைவல்ல. அதிமுகவுக்குத் தான் பின்னடைவு என்பதைக் காலம் உணர்த்தும்” என்று கூறினார்.

AMMK | TTV Dhinakaran | TN Politics | NDA Alliance | ADMK | BJP

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in