இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி பலவீனமாக்கிவிட்டார்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |

இபிஎஸ் செய்த துரோகங்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தண்டனை கிடைக்கும்...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
1 min read

இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்திவிட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-

“துரோகத்திற்கான நோபல் பரிசைப் பெறத் தகுதி உடையவர் என்று செங்கோட்டையனால் சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி, 2017-ல் இருந்து செய்த துரோகங்களுக்கு உறுதியாக அவருக்குத் தண்டனை கிடைக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் அவரது துரோகங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் இறுதித் தீர்ப்பு எழுதுவார்கள்.

2017-ல் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்தார்கள். அவர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் அடையாளத்தைக் கொண்டு வெற்றி பெற்றவர்கள் அல்ல. ஆனால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தபோது அந்தத் தொகுதி மக்களிடம் சொல்லிவிட்டுத்தான் நடவடிக்கை எடுத்தாரா?

அதேபோல, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக என்ற இயக்கத்தின் அடிப்படை சட்ட விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு என்ற பெயரில், தனது கைத்தடிகளை மட்டும் கூட்டி, மாற்றியிருக்கிறாரே! அதெல்லாம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களைச் சந்தித்துக் கேட்டுத்தான் செய்தாரா?

எம்ஜிஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையைக் கையில் வைத்திருக்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் அகம்பாவம், ஆணவம், பதவி வெறியிலே, பண திமிரிலே இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசித் திரிகிறார். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி வருகிறார். அதிமுக என்ற கட்சியை இன்றைக்கு எடப்பாடி திமுகவாக மாற்றி, ஒரு வட்டார கட்சியாக, குடும்ப கட்சியாக மாற்றியிருக்கிறார். இதை செங்கோட்டையன் மன வருத்தத்துடன் குற்றம்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் இறுதித் தீர்ப்பை வழங்குவார்கள். நாம் காத்திருந்து பார்ப்போம்” என்றார்.

Summary

AMMK General Secretary TTV Dinakaran alleged that Edappadi Palaniswami had weakened the Irattai Ilai symbol of AIADMK

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in