டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

செல்போனை காவல் துறையிடம் ஒப்படைத்த டிடிஎஃப் வாசன்

செல்போன் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்க இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டிருந்தார்.
Published on

விதிமுறைகளை மீறி கார் ஓட்டிய வழக்கில் யூடியூபரான டிடிஎஃப் வாசன் தனது செல்போனை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி அதை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் பல ரசிகர்களைக் கொண்டவர் டிடிஎஃப் வாசன்.

ஏற்கெனவே, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த காரணத்தால் டிடிஎஃப் வாசனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மே 15 அன்று சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்ற வாசன், மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகவும், அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் பேரில், மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதே தினத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாசன், பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை என்றும், இது தொடர்பாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், டிடிஎஃப் வாசன் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் நேரில் ஆஜராகுமாறு வாசனுக்கு மதுரை அண்ணா நகர் காவல்துறை சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து ஜூன் 3 அன்று காலை காவல் நிலையத்தில் ஆஜரான வாசன் தனது செல்போன் மற்றும் ஆவணங்கள் சென்னையில் உள்ளதால், அவற்றை ஒப்படைக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். அதனை ஏற்ற காவல் துறையினர், ஜூன் 5-ல் தனது செல்போனை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் இன்று தனது செல்போனை மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in