சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (செப்.26) உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை நீண்ட விசாரணைக்குப் பிறகு பிறப்பித்தார் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன்.
இன்று காலை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அதன் உத்தரவில் தலா ரூ. 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிப்பது தொடர்பான விசாரணை இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் நீதிபதி கார்த்திகேயன்.
மேலும், `பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. எனவே பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி முன்பு பிணை உத்தரவாதங்களை தாக்கல் செய்யுங்கள்’ என்றார் நீதிபதி கார்த்திகேயன்.
இதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி முன்பு எப்படி பிணை உத்தரவாதங்களை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர். இதனை அடுத்து அமலாக்கத்துறை வழக்கறிஞரை அழைத்து வர உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன் விசாரணையை ஒத்தி வைத்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் தொடங்கிய விசாரணையில் ஆஜரான அமலாக்கத்துறை வழக்கறிஞர், செந்தில் பாலாஜியை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டார்.
இதன் பிறகு செந்தில் பாலாஜிக்கு அவரது உறவினர்கள் தியாகராஜன் மற்றும் சிவபிரகாசம் ஆகியோர் வழங்கிய ரூ. 25 லட்சத்துக்கான இரு உத்தரவாதப் பிணையை ஆராய்ந்த நீதிபதி கார்த்திகேயன் அவற்றை ஏற்று, செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.