
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை நேற்று (ஜூலை 12) திருச்சி மாவட்டக் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
57 வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி துரை (எ) துரைசாமி காவல்துறையால் சில காலமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் உள்ள வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கியிருக்கும் செய்தி காவல்துறைக்கு கிடைத்தது.
துரையைப் பிடிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல், உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஆய்வாளர் முத்தையன் துரைசாமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட துரைசாமியின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட துரையின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று (ஜூலை 12) புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். திட்டமிட்டு துரையை அழைத்துச் சென்று காவல்துறையினர் என்கவுண்டர் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். துரையின் உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.