
சாதிச் சான்றிதழ் கேட்டு பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக மதுரையில் இன்று (நவ.11) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூருக்கு அருகே உள்ள பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2023-க்கு முன்பு இந்தக் சமூகத்தினரின் குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதல் வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த ஓராண்டாக மதுரை மாவட்ட நிர்வாகத்தால் இந்த சமூகத்தினரின் குழந்தைகளுக்கு காட்டுநாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தகுந்த விசாரணை மேற்கொண்ட பிறகே மீண்டும் சாதிச் சான்றிதழ் தர இயலும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சான்றிதழ் வழங்காததால் பழங்குடியின ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளதாகவும், சில கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் தர வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறி, தங்களுக்கு காட்டுநாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி அந்த சமூகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடந்த 6 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவித்த மதுரை மாவட்ட நிர்வாகம், `அந்தப் பகுதியில் வசித்துவரும் மக்களின் பழக்கவழக்கங்கள் எதுவும் பழங்குடியினர் பின்பற்றக்கூடியது போன்று இல்லாத காரணத்தினாலும், உண்மைத்தன்மை சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாலும் சாதிச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறோம்.
ஆனால் விசாரணை அடிப்படையிலும், ஆவணங்கள் அடிப்படையிலும் தீர விசாரித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.