
கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த தமிழக பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் தேசிய அளவில் பழங்குடியின பிரிவில் 417வது இடத்தைப் பெற்றதன் மூலம் தன் ஐஐடி கனவை சாத்தியப்படுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கருமாந்துறையைச் சேர்ந்தவர் ஆண்டி. மலையாளி பழங்குடி இனத்தவரான ஆண்டி, குடும்பத்தின் வறிய சூழல் காரணமாக 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், வைராக்கியத்துடன் தன்னுடைய 4 பிள்ளைகளையும் படிக்க வைத்தார்.
ஆண்டியின் பிள்ளைகளில் ஒருவரான ராஜேஸ்வரி, தற்போது நடந்துமுடிந்த ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில், பழங்குடியினர் பிரிவில் தேசிய அளவில் 417வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்தாண்டு ஆண்டி இறந்துவிட்டாலும், விடாமுயற்சியுடன் படித்து தந்தையின் கனவை அவர் நிறைவேற்றியுள்ளார்.
கருமாந்துறை அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி அடைந்ததன் மூலம், அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் படித்து ஐஐடி மெட்ராஸில் நுழையும் முதல் மாணவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்தாண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் பழங்குடியினர் பிரிவில் 1,691வது இடத்தைப் பெற்ற மாணவர் ஒருவருக்கு, ஐஐடி மெட்ராஸில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் பழங்குடியினர் ஒதுக்கீட்டின் கீழ் கடைசி இடம் கிடைத்தது. இதனால் ராஜேஸ்வரி ஐஐடி மெட்ராஸில் படிப்பது உறுதியாகியுள்ளது.
ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.