பைக் டாக்சிகள் மீது நடவடிக்கையா?: போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

பைக் டாக்சிகள் மீது நடவடிக்கையா?: போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

பைக் டாக்சியில் பயணிப்போர் இறந்தால் அவர்களுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் பிரச்னை உள்ளது.
Published on

விதிகளுக்கு உட்பட்டு பைக் டாக்சிகள் இயக்கபடுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் தமிழக போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.

வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை இன்று (டிச.11) முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மண்டல மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு, போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேசியவை பின்வருமாறு,

`பைக் டாக்சி விவகாரத்தில் நாம் மட்டும் முடிவெடுக்க முடியாது. இதில் மத்திய அரசும் சம்மந்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனங்களை வணிகரீதியில் இவ்வாறு டாக்சிகளாக பயன்படுத்த மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

இது குறித்து ஆய்வுசெய்ய உயரதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து பைக் டாக்சிகள் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. அதில் பணியாற்றுகின்றவர்களின் பாதுகாப்பை முன்வைத்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறோம்.

காப்பீடு இல்லாமல் பைக் டாக்சிகள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஒருவேளை பைக் டாக்சிகளில் பயணிப்போர் மரணமடைந்தால் அவர்களுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் பிரச்னை உள்ளது. மறுபுறம், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் சார்பில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே அனைத்தையும் கருத்தில்கொண்டு பைக் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில், அவற்றை ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சொந்த வாகனத்தில் பயணிப்பதற்கும், வாடகை வாகனத்தில் பயணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அதே நிலைதான் பைக் டாக்சி பயணங்களுக்கும் நிலவுகின்றன’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in