

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பொங்கலுக்கு 34,087 பேருந்துகள் இயக்கம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி 9 முதல் 14 வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 10,245 சிறப்புப் பேருந்துகள் என ஆறு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாள்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிளுக்காக ஜனவரி 16 முதல் 19 வரை, தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 15,188 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,820 என மொத்தம் 25,008 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னை பேருந்து நிலையங்கள் விவரம்
இதில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்.
மாற்றுப் பாதையில் செல்ல அறிவுரை
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து ஓஎம்ஆர் சாலை வழியாக திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு விவரங்கள்
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான டி.என்.எஸ்.டி.சி. செயலி மற்றும் வலைத்தள முகவரியைப் பயன்படுத்தலாம். 94440 18898 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் பேருந்து பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நடைமேடை விவரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இணைப்புப் பேருந்துகள்
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Transport Minister Sivasankar has announced that 34,087 buses will be operated in Tamil Nadu on the occasion of Pongal.