காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் - ஒழுங்கு சீராகிவிடாது: இபிஎஸ்

"திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவல் துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் - ஒழுங்கு சீராகிவிடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்தன. இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் சாய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் - ஒழுங்கு சீராகிவிடாது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் - ஒழுங்கு சீராகிவிடாது. நிர்வாகம் சரியாக இருந்தால்தான், சட்டம் - ஒழுங்கைக் காக்க முடியும். காவல் துறைக்கான பொறுப்பை வகிப்பவர் முதல்வர். அவர் இந்தத் துறையை சிறப்பாகக் கவனித்து திறம்பட செயல்பட்டிருந்தால், சட்டம் - ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.

திறமையற்ற பொம்மை முதல்வர், தமிழ்நாட்டை ஆட்சி செய்வதால், காவல் துறையில் இருக்கிற காவலர்களுக்கு, காவல் துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. எனவே, அவர்களால் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவல் துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. எனவே தான் போதைப்பொருள் விற்பனை தாராளமாக இருக்கிறது. குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொலை நடக்காத நாளே இல்லை. எங்கு பார்த்தாலும் ரௌடிகளின் ராஜ்ஜியமாக இருக்கிறது. காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டால்தான், இவற்றை ஒடுக்க முடியும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in