நீலகிரியில் கடையடைப்புப் போராட்டம்: சுற்றுலா கடுமையாக பாதிப்பு!

முக்கிய சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தாவரவியல் பூங்கா
தாவரவியல் பூங்கா
1 min read

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி நீலகிரியில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருவதை அடுத்து, அங்கே சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 1) தொடங்கி அடுத்த மூன்று மாத காலத்திற்கு, நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வெளி மாவட்ட, மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையைக் கட்டாயமாக்கி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்தார். இதன்படி, வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கும் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று, வெளி மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த 6,000 வாகனங்களுக்கு மட்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. பிற வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.

இ-பாஸ் நடைமுறை சுற்றுலாவுக்குத் தடையாக இருப்பதால் அதை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், நீலகிரி மக்களின் நீண்டகால கோரிக்கைகளான 12 அம்ச முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரியும், அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (ஏப்ரல் 2) ஒரு நாள் மட்டும் 24 மணி நேர வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர்களும் ஆதரவளித்துள்ளார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் போன்ற அனைத்தும் அடைக்கப்பட்டு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய நகரங்களும், முக்கிய சுற்றுலா இடங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பாலங்கங்களும், மருத்துக் கடைகளும் மட்டுமே இன்று திறந்திருந்தன. ஆட்டோக்களும், வாடகைக் கார்களும் இயங்காததால் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடியிருந்ததால், அம்மா உணவகங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in