
நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வழக்கமாக, கோடை மற்றும் மழை காலம் துவங்கினால் சில காய்கறிகளின் விலை உயரும். மேலும், வரத்து குறைவு, பண்டிகை நாட்கள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக காய்கறிகளின் விலையில் மாற்றம் இருக்கும்.
ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் பருவம் தவறிய மழை, நோய் தாக்குதலால் இந்த மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரத்து குறைந்த நிலையில் நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120-க்கும், தெலங்கானாவில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் விற்பனையாகிறது. தெலங்கானாவில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 - 70 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 - 90 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெளி மார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ. 60 - 100 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.