
வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மூன்றே நாள்களில் தக்காளியின் விலை கிடுகுடுவென உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளி விலை கடந்த இரு நாள்களில் கிலோ ஒன்றுக்கு ரூ. 10 முதல் 15 வரை அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் நேற்று ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று (ஜூலை 3) ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்துவரும் கோடை மழையால், தக்காளி வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்த விற்பனை காய்கறி சந்தையான கோயம்பேட்டில் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சென்னையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல்களில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருளான தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.