தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 சுங்கச்சாவடிகள் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் 1 முதல் 7% வரை உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் 67 சுங்கச்சாவடிகளில் மொத்தம் 62 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதில் 34 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மீதம் இருக்கும் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்வு அமலாகும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2008 தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் இந்தக் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, சமயபுரம், ஓமலூர், உளுந்தூர்பேட்டை, எலியார்பத்தி, வாலாஜா போன்ற 28 சுங்கச்சாவடிகளில் வாகனங்களைப் பொறுத்து 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ. 5 முதல் அதிகபட்சமாக ரூ. 150 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் இருந்து 2023-2024 நிதியாண்டில் ரூ. 4,221 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டை ஒப்பிடும்போது இது 10 சதவீதம் அதிகமாகும். 2022-2023 நிதியாண்டில் ரூ. 3,817 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்திய அளவில் சுங்கக்கட்டண வசூல் அடிப்படையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.