.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
78-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தொடந்து 4-வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதை தொடர்ந்து விழா உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் புதிதாக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
பொது மக்களுக்கு ஜெனரிக் வகை மருந்துகள் உட்பட அனைத்துவித மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் `முதல்வர் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்படும், இந்தத் திட்டத்தில் முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்று விழாவில் அறிவித்தார் முதல்வர்.
மேலும் இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20,000-ல் இருந்து ரூ. 21,000 ஆக உயர்த்தப்படும் எனவும், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கான உதவித்தொகை ரூ. 11,000-ல் இருந்து ரூ. 11,500 ஆக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் அறித்துள்ளார்.