பொது வெளியில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் `தகவல் சரி பார்ப்பகம்’, புதிய வாட்ஸ் அப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளதாக செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பரப்பப்படும் பொய்ச் செய்திகளால் மக்களிடையே பிளவும் வெறுப்பும் ஏற்படும் அபாயம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
தகவல்களின் உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமெனும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை – செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் `தகவல் சரிபார்ப்பகம்’ செயல்பட்டு வருகிறது.
ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உண்மைத் தகவல்களே ஊட்டச்சத்தாகும். எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வாட்ஸ் அப் சேனல் ஒன்றை அரசின் ‘தகவல் சரிபார்ப்பகம்’ உருவாக்கியுள்ளது.
பொய்ச் செய்திகள் எனும் சமூக நச்சுக் கிருமிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்க, `தகவல் சரிபார்ப்பகம்’ உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் சேனலில் இணைவீர்'.