
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை ஆகச்சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துத் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவரின் பதிவு பின்வருமாறு:
கடந்த ஏப்ரல் 4, 2022 அன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஓசூர் விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் V.K.சிங், `இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் வருடத்திலிருந்து அடுத்த 25 வருடங்களுக்கு, 150 கி.மீ. சுற்றளவில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது’ எனத் தெரிவித்தார்.
மேலும், `ஒசூரில் ஏற்கனவே அமைந்துள்ள விமான நிலையம் TALL என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. எனவே அதை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது. தமிழக அரசு வேண்டுமானால் TALL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒசூர் விமான நிலையத்தை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனவும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
`இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒசூரில் இருக்கும் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல் வெறும் விளம்பரத்துக்காக ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என (புதிய) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே கடந்த 2022-ல் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அரைகுறையாக நிற்கின்றன. பேருந்துகள் கூட வாங்காத திமுக தற்போது விமான நிலையம் அமைப்பதாகக் கூறுவது ஆகச்சிறந்த நகைச்சுவை’ என முதல்வரின் அறிவிப்பைப் பகடி செய்து பதிவிட்டிருந்தார் அண்ணாமலை
மேலும், `கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?’ எனத் தன் பதிவில் கேள்வியெழுப்பி உள்ளார் அண்ணாமலை.