எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜுனா

திருமா அண்ணனின் விமர்சனங்களை எனக்கான ஆலோசனைகளாக எடுத்துக்கொள்வேன்.
எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜுனா
1 min read

`திருமா அண்ணனின் விமர்சனங்களை எனக்கான ஆலோசனைகளாக எடுத்துக்கொள்வேன், என் எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.

விசிகவில் இருந்து விலகுவதாக நேற்று (டிச.15) அக்கட்சித் தலைவர் திருமாவளவனுக்குக் கடிதம் அனுப்பினார் ஆதவ் அர்ஜுனா. இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசியவை பின்வருமாறு,

`தலைவர் திருமாவளவனின் வார்த்தைகளுக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன். அவரது வாழ்த்துகளையும், அன்பையும், அவர் கூறிய ஆலோசனைகளையும் எடுத்துக்கொண்டு நிச்சயமாக அவருடனும் நான் பயணிப்பேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் அவமதிப்பு குறித்து எம்.எல்.ஏ. வேல்முருகன் தெரிவித்த கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்.

இதற்காகக்தான் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி எதிர்காலத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விஷயத்தை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கியமாக கூட்டணித் தலைவர்கள் முன்னெடுத்துச்சென்று ஒரு புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது.

இதை கூறியதற்காகவே நான் தண்டிக்கப்பட்டதாக எண்ணுகிறேன். ஆனால் அந்தக் கொள்கையை என்னுடைய பயணத்தில், பிரச்சாரத்தின் வழியாக உறுதியாக முன்னெடுப்பேன். திருமா அண்ணனின் விமர்சனங்களை எனக்கான ஆலோசனைகளாக எடுத்துக்கொள்வேன்.

கள அரசியலில் பல விஷயங்களை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எப்போதுமே அவர் என்னுடைய ஆசான். கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் எப்போதும் என் பயணம் இருக்கும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பிரச்சார களத்திலிருந்து முழு நேர அரசியல் களத்திற்கு வரும்போது என் மீது கிளப்பப்படும் சந்தேகங்களுக்கு என் பயணத்தின் வழியாகவே பதில் கூற முடியும். விமர்சனங்களுக்கு நாம் நேரடியாக பதில் கூறுவதைவிட, நம் பயணத்தின் வழியாக புதிய மாற்றத்தைக் கொண்டுவந்து மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். என் எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன்' என்றார்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in