டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பாக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
2024-ம் ஆண்டுக்கான குரூப் 2 நிலையில் காலியாகவுள்ள 507 இடங்களையும், அதேபோல் குரூப் 2ஏ நிலையில் காலியாகவுள்ள 1820 இடங்களையும் நிரப்புவதற்கான குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜுன் 20 அன்று வெளியிட்டது.
ஆன்லைனில் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டு நேற்று (ஜூலை 20) வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய பதவிக்கான பணியிடங்களுக்கு சுமார் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஒரு பணியிடத்திற்குச் சராசரியாக 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.