படம்: https://twitter.com/Dayanidhi_Maran
படம்: https://twitter.com/Dayanidhi_Maran

தேர்தல் பிரசாரத்தில் கவனம் ஈர்க்கும் குடும்ப உறுப்பினர்கள்!

வாரிசு அரசியல் என்பது பெரும் விமர்சனமாக உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரசாரத்துக்கு அழைத்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுக்க பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதில் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களையும் பிரசாரத்துக்கு அழைத்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தருமபுரியில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மகள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேபோல, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மனைவி அனுராதா திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

இந்த வரிசையில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மகளும் இணைந்துள்ளார். தயாநிதி மாறன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அவரது மகளும் உடனிருந்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் என்பது பெரும் விமர்சனமாக உள்ள நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது வாக்காளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "வேட்பாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் பிரசாரத்தின்போது உடனிருந்தால், வாக்காளர்களுடன் அது உறவை உண்டாக்குகிறது. குறிப்பாக பெண் வாக்காளர்கள் மத்தியில் அது ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது" என்றார் அவர்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கூறுகையில், "அதிமுகவினர் குடும்ப உறுப்பினர்களுடன் பிரசாரம் செய்வதற்கும் திமுக மற்றும் பாமக குடும்ப உறுப்பினர்களுடன் பிரசாரம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. திமுகவும், பாமகவும் குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிகள். குடும்ப உறுப்பினர்களை பிரசாரத்துக்கு அழைத்து வருவது மூலம், தங்களுக்கு அடுத்து யார் இருக்கிறார்கள் என்ற செய்தியை மக்களிடம் வெளிப்படுத்துகிறார்கள்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in