பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் இன்று (ஆகஸ்ட் 7) தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து 21 நபர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 28-ல் மூன்று நபர்களைக் கைது செய்து பெரம்பூர் செம்பியம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலை சம்பவத்துக்கு பின்னால் இருக்கும் நபரைக் கண்டறிய தீவிரமாக செயல்பட்டு வருகிறது தமிழக காவல்துறை.
இந்நிலையில் காவல்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சம்மந்தப்பட்டுள்ளது காவல்துறையினருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அஸ்வத்தாமனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டது காவல்துறை.
இந்த விசாரணையில் ஸ்கிராப் தொழில், சோழவரம் பகுதியில் உள்ள ஒரு நிலம், வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் போன்ற விவகாரங்களில் ஆம்ஸ்ட்ராங்குக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வந்தது காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்துக்கு முன்பு, தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு, அருள் ஆகியோர் அடிக்கடி அஸ்வத்தாமனைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
எனவே அஸ்வத்தாமனிடம் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது தமிழக காவல்துறை. அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ளார். இதற்கிடையே அஸ்வத்தாமன் கைது தொடர்பான செய்தி வெளியானதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.