டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்த நிலையில், அண்ணாமலை, தமிழிசை, வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என அண்மையில் அறிக்கை வெளியிட்டது. அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
இதனிடையே, மார்ச் 17 அன்று சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். மேலும், ஒரு வாரத்துக்குப் பிறகு 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வினோஜ் பி செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் போராட்டத்துக்காகப் புறப்படும்போது, வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வினோஜ் பி செல்வம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். இவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் சுணங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, போராட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த அண்ணாமலை காவல் துறையினரால் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, "திமுக அரசின் ரூ. 1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.