தமிழக மீனவர்கள் என்றால் இளக்காரமா?: ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் சாடல் | MK Stalin |

தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசு வன்மத்தைக் காட்டுகிறது என்றும் பேச்சு...
தமிழக மீனவர்கள் என்றால் இளக்காரமா?: ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் சாடல் | MK Stalin |
3 min read

தமிழ்நாடு என்றால் மத்திய பாஜக அரசுக்கு இளக்காரமாக இருக்கிறதா? தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து வன்மத்தைக் காட்டி வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.

ராமநாதபுரத்தில் ரூ. 738 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் பேசியதாவது:-

நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்திற்கு வந்திருக்கிறேன். எத்தனையோ பெருமைகளுக்கு சொந்தமான ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய இந்த அரசு விழாவில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என்றால் தண்ணீர் இல்லாத காடு என்று சொல்வார்கள். அந்த நிலைமையை மாற்றிக்காட்டியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. இந்த அடியேன் உள்ளாட்சி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக தவித்த மக்களுக்கு ரூ. 616 கோடி மதிப்பீட்டில் காவேரி கூட்டணைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். குடிநீர் பிரச்சனை என்ற காரணத்தால் எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றியது திமுக ஆட்சி. இதற்காக அந்தக் காலத்தில் மாதத்திற்கு மூன்று முறையாவது ராமநாதபுரத்திற்கு வந்து நான் ஆய்வு நடத்தினேன்.

இப்போது நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், கூட்டணைத் திட்டத்தை விரிவுபடுத்த உத்தரவிட்டு, அந்தப் பணிகள் இப்போது விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. பழைய திட்டத்தின் மூலம் 87,500 பேர் பயன்பெறுகிறார்கள். இப்போது விரிவுபடுத்தப்படுவதால் 2,95,000 பேர் பயனடையப் போகிறார்கள். இங்கே வருவதற்கு முன்பு, அந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் அமைச்சர் நேருவிடம் பேசினேன். டிசம்பரில் விரைவுபடுத்தக்கூடிய அந்தத் திட்டத்தைத் தொடங்கிடலாம் என்று உறுதியாகச் சொன்னார். அப்படித் தொடங்கும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,82,500 நபர்களின் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப் போகிறோம். இனிமேல் யாரும் ராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் இல்லாத காடு என்று சொல்ல முடியாது.

இன்று ராமநாதபுரத்தில் மொத்தம் ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான விழா நடைபெறுகிறது. மிக முக்கியமாக, ராமநாதபுரம் பேருந்து நிலையம், தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம், கோவிலாங்குளத்தில் சமூக நல விடுதி, பரமக்குடி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நல விடுதி ஆகியவற்றைத் திறந்து வைத்திருக்கிறேன். இவ்வளவு சொன்னாலும், இங்கு வந்துவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் நான் போக முடியாது. நம் அமைச்சர், நம்முடைய எம்எல்ஏ உள்ளிட்டோர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒன்பது புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடப் போகிறேன்.

முதலாவது அறிவிப்பு, ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி நான்கு வழித்தடத்தில் இருந்து ஆறு வழித்தடமாக ரூ. 30 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு, திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கல வட்டங்களில் இருக்கக்கூடிய 16 முக்கிய கண்மாய்கள் ரூ. 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு, கீழக்கரை வட்டத்தில் இருக்கக்கூடிய உத்திரசோகமங்கை, வித்தானூர் உள்ளிட்ட ஆறு கண்மாய்கள் ரூ. 4.65 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு, கடலாடி வட்டத்தில் இருக்கக்கூடிய செல்வானூர் கண்மாய் ரூ. 2 .60 கோடி மதிப்பீட்டிலும், சிக்கல் கண்மாய் ரூ. 2.30 கோடி மதிப்பீட்டிலும் மறுசீரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு, பரமக்குடி நகராட்சிக்கு ரூ. 4.50 கோடி செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

ஆறாவது அறிவிப்பு, ராமநாதபுரம் நகராட்சியின் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகளை மேம்படுத்தி, புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்குவதற்கு வகையில் ரூ. 10 கோடி செலவிடப்படும். புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படும்.

எட்டாவது அறிவிப்பு, கீழக்கரை நகராட்சிக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடமும், ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடியும் கட்டப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு, கமுதி பகுதி விவசாயிகளின் நலன்கருதி, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

நாம் இவ்வளவு செய்தாலும், நம் மீனவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னை, இலங்கைக் கடற்படையால் ஏற்படும் தாக்குதல். இதில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக, அரசு நம் மீனவர்களைக் காக்க எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். இதை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய பாஜக அரசு ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவும் பாஜக அரசு மறுக்கிறது. இலங்கை சென்ற இந்தியப் பிரதமரும் இதை வலியுறுத்த மறுக்கிறார். கச்சத்தீவை தரமாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஏதாவது மறுத்துப் பேசியிருக்க வேண்டுமா, வேண்டாமா? தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டார்கள். நாம் இந்தியர்கள் இல்லையா? தமிழ்நாடு தமிழர்கள் என்றாலே மத்திய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது? தமிழ்நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய வன்மத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள் என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஜிஎஸ்டியால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை, சிறப்புத் திட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்கள். பள்ளிக் கல்விக்கான நிதி தரமாட்டார்கள். இதெல்லாம் போதாது என்று தேசியக் கொள்கைகளால் கல்வி வளர்ச்சிக்குத் தடை, கீழடி அறிக்கைக்குத் தடை, எல்லாவற்றுக்கும் மேல் தொகுதி மறுவரையறை. இப்படி தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே மத்திய பாஜக அரசு வழக்கமாகச் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் உடனே வராத, நிதியைத் தராத ஒன்றிய நிதியமைச்சர், இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பழிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டின் மீது இருக்கிற அக்கறையால் கிடையாது. இங்குதான் நீங்கள் கவனிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என்று பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர் வாழத் துடிக்கும் ஒட்டுண்ணியாகத்தான் பாஜக இருக்கிறது. மாநில நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளைப் பறித்து, இன்னும் சொல்ல வேண்டுமானால், மாநிலங்களே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகிற மத்திய பாஜக, கூட எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஆதிமுகவும் கூட்டணி வைத்துக்கொண்டு, அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த தலையாட்டிப் பொம்மையாக இருக்கிறது.

பாஜகவை திமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படையில் ஏதாவது இருக்கிறதா? குறைந்தபட்ச செயல் சட்டம் ஏதாவது இருக்கிறதா? எந்தக் கோரிக்கையாவது முன்வைத்து கூட்டணி சேர்ந்திருக்கிறார்களா? எதுவும் கிடையாது. தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி, தங்களுடைய தவறுகளில் இருந்து தப்பிப்பதற்காக சலவை இயந்திரம் தான் பாஜக. அந்த சலவை இயந்திரத்தில் உத்தமராகிவிடலாம் என்று குதித்திருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், கூட்டத்துக்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு சென்று, தன்னுடைய கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார்கள். அவரோ மைக் கிடைத்தால் போதும் என்று, தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம்போல தீட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு நலன்களையும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்ட யாரும் பாஜக கூட்டணிக்கு போக மாட்டார்கள். ஏனெனில், நாட்டு மக்களைத் துண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கைகளை முழுவதும் செயல்படுத்தி இருக்கக்கூடிய அரசியல் முகம், அதிகார பலம் தான் பாஜக. அதிலும், மூன்றாவது முறை மக்களுடைய ஆதரவு குறைந்து, ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்எஸ்எஸ் பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பாஜக.

வரலாறு முழுக்க இவர்களுடைய கொள்கைச் செயல்களுக்கு எதிராக நின்று, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காக்கின்ற நம்முடைய பணி, அடுத்து அமையவிருக்கக்கூடிய திராவிட மாடல் 2.0விலும் தொடரும். என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கிற கடமையை இன்னும் சிறப்பாகச் செய்து காட்டுவேன். உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுவேன். திராவிட மாடல் ஆட்சிதான் அடுத்து வரக்கூடிய தேர்தலையும் வென்று தொடரும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in