ரூ. 1,000 கோடி முறைகேடு குற்றச்சாட்டில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது பெரும் பேசுபொருளானது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"ஒன்றிய அரசு அமலாக்கத் துறையை ஏவி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
பணியிட மாற்றங்கள் என்பது குடும்ப சூழ்நிலை, மருத்துவக் காரணங்கள் என அடிப்படை காரணங்களுக்காக டாஸ்மாக் நிறுவனத்தால் வழங்கப்படக் கூடிய பணியிட மாற்றங்கள். அதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால், தவறுகள் நிகழ்ந்ததைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதேபோல போக்குவரத்து தொடர்புடைய டெண்டர் என்பது வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கப்பட்ட டெண்டர். அதில் முறைகேடுகளுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமில்லை. இதில் ஆவணங்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதேபோல, மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும் மற்றும் பாட்டில் கொள்முதல் இடையிலான வணிகம் என்பது எங்களுடைய நிறுவனத்துக்கு வெளியில். டாஸ்மாக் நிறுவனத்தைப் பொறுத்தவரை நான்கு ஆண்டு காலங்களில் பார் டெண்டராக இருந்தாலும் இணையவழி டெண்டராக மாற்றப்பட்டுள்ளது.
அவர்கள் சொல்லியிருக்கும் ரூ. 1,000 கோடி முறைகேடு என்பது, எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ரூ. 1,000 கோடி என்பதை முன்பே ஒருவர் பேட்டியில் சொல்கிறார். பின்னர், அமலாக்கத் துறை அதே ரூ. 1,000 கோடி என்ற அறிக்கையில் பதிவிட்டு ரூ. 1,000 கோடி என்று கருத்தை முன்வைக்கிறார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது.
எனவே, அமலாக்கத் துறை சோதனைகள் என்பதை டாஸ்மாக் நிறுவனத்தைப் பொறுத்தவரை அரசைப் பொறுத்தவரை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். வெளிப்படைத்தன்மையுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது" என்றார் செந்தில் பாலாஜி.