பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுப்பு?

பொன்முடியின் சிறைத் தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்.
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப்படம்)
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப்படம்)ANI

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 11-ல் நிறுத்திவைத்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த சிறைத் தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், தீர்ப்பின் நகல் வெளியானவுடன் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது உறுதியானது.

இதன்மூலம், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது திரும்பப் பெறப்பட்டது. பொன்முடி மீண்டும் அமைச்சராவதிலும் எந்த சிக்கலும் இல்லை எனக் கூறப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதிய மறுதினமே ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், பொன்முடி அமைச்சராவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், பொன்முடி அமைச்சராகப் பதவியேற்றுக்கொள்வது கேள்விக்குள்ளானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

இந்த நிலையில், பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், பொன்முடியின் சிறைத் தண்டனை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றவாளி என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்கவில்லை என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கு விவரம்:

2006 - 2011 திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 2011-ல் அதிமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை 2016-ல் விடுவித்தது.

2017-ல் லஞ்ச ஒழிப்புத் துறை இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கின் விசாரணையைக் கடந்த நவம்பர் 27-ல் நிறைவு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்திவைத்தார். டிசம்பர் 19-ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். தொடர்ந்து, டிசம்பர் 21-ல் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in