.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
`இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்’ என்று பேசியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இன்று (ஆகஸ்ட் 2) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். விழாவில் அவர் பேசியவை பின்வருமாறு:
`ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய அரசுப் பள்ளிக் குழந்தைகள், இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் சாரை சாரையாக படிக்கப் போகிறார்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே நம்பர் ஒன்.
இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களுக்குப் போவது பெரும் சமூக, பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளம். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் எந்த உயரத்தையும் எட்டிப் பிடிப்பார்கள், ஏன் விண்வெளியில் கூட நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இனி ஆட்சி செய்வார்கள்.
சில நாட்களில் உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவுள்ள மாணவக் கண்மணிகளே தன்னம்பிக்கை உள்ளவர்களாக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு பெருமைப்பட, இந்திய நாடு பெருமைப்பட நீங்கள் உயர வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சராக மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’.
இந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், மடிக்கணினிகளையும் வழங்கினார் ஸ்டாலின்.