அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது தமிழக அரசு.
தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 27-ல் சென்னையில் இருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோவுக்கு சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆகஸ்ட் 29-ல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, மைக்ரோசிப் டெக்னாலஜி, ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் போன்ற 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 30) ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயரதிகாரிகளைச் சந்தித்து உரையாடிய முதல்வர் ஸ்டாலின், அந்நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது உற்பத்திச் சூழலை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் திறன் வளர்ச்சிமிக்க இளைஞர்கள், பெண்களின் கல்வி திறன், மாநிலத்தில் உள்ள வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வசதிகள் போன்றவை குறித்தும் பேசினார்.
பிறகு தமிழக முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வகங்கள் வழியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.