

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக நவம்பர் 6 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு கடந்த அக்டோபர் 27 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “விரைந்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள் , 10 நாள்கள் அவகாசம் வழங்கியிருந்தனர்.
இதனடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வரும் நவம்பர் 6 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
”தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 6.11.2025 அன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் வகுப்பது பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் 6.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை. 10-ஆவது தளத்தில் மாண்புமிகு மூத்த அமைச்சர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் பங்குபெறக்கோரி அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்தின் அழைப்புக் கடிதம் மேற்படி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Tamil Nadu government has announced that an all-party meeting will be held on November 6 regarding the formulation of guidelines for political parties' public meetings.