அண்ணாவின் சாதனைகளை அடுக்கிய தமிழ்நாடு அரசு!

""ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார் அண்ணா."
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையிலுள்ள அவருடையத் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதுதொடர்புடைய செய்திக் குறிப்பில் அண்ணாவின் சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

"தமிழ்நாடு முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2024 அன்று காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்ப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் நடராஜர் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.9.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல்வாதியாகவும், உத்தமத் தலைவராகவும் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா, தம்முடைய சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார்.

பேரறிஞர் அண்ணா "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைத் தம் தலைவராகக் கொண்ட பேரறிஞர் அண்ணா, தம்முடைய ஆட்சிக்காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.

தாய் மொழி மீது கொண்ட அளவற்றப் பற்றின் காரணமாக, ”சென்னை மாநிலம்” என்று அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தின் பெயரை, "தமிழ்நாடு" என மாற்றம் செய்தார். பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டம் முதன் முதலில் தொடங்கியது. தமிழ்நாட்டில் இருமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

1967ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை "தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்" என மாற்றம் செய்தார். 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணாவால் நடத்தப்பட்டது.

தமிழக அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற ஆங்கிலச் சொற்கள் அகற்றப்பட்டு, 'தமிழ்நாடு அரசு' என்றும், 'சத்தியமேவ ஜெயதே' எனும் சொற்றொடர்க்குப் பதிலாக "வாய்மையே வெல்லும்" என்றும் மாற்றி இடம் பெறச் செய்தார், "ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் பேரறிஞர் அண்ணா மறைந்தும், மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில், பேரறிஞர் அண்ணா கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், மற்றும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை அமைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தினை ஏறத்தாழ 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாகப் புனரமைத்து, 26.2.2024 அன்று திறந்து வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் "தம்பி உன்னைத்தான் தம்பி.." என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் – நம் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவை வணங்கி என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உறுதி ஏற்போம்"! என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in