

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்ள பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட 41 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதனை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
ஆனால், இந்தவழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு மற்றும் தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதனடிப்படையில், கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், கடந்த சில நாள்களாக கரூரில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் இன்று கரூர் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தவெக தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசின் மூத்த அதிகாரிகள் பேட்டி அளித்ததை காரணம்காட்டி, சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கு சட்டபூர்வ காரணமாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பேரிடரின் போது மீட்பு, நிவாரணம் மற்றும் விபத்து குறித்த தகவல்களைப் பற்றி பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. அதனடிப்படையிலேயே அரசு அதிகாரிகள் தரவுகளின் அடிப்படையில் விளக்கமளித்தார்கள். சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்னை. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதரமற்றவை. கரூர் வழக்கில் புலனாய்வு விசாரணையில் எவ்வித குறைபாடும் நிரூபிக்கப்படவில்லை. இதனால், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu government has filed a petition in the Supreme Court seeking quashing of the order ordering a CBI probe into the Karur stampede case.