பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்திற்கு அனுமதி தரப்படவில்லை: தமிழ்நாடு அரசு | Pallikaranai |

தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம்...
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
2 min read

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

நீரும் நிலமும் கலந்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலப்பரப்பு, சதுப்பு நிலம் என்று அழைக்கப்படுகிறது. இவை வெள்ளம் ஏற்படும்போது அதிகப்படியான நீரை உறிஞ்சி, வெள்ள பாதிப்பைத் தடுக்கும். நிலத்தடி நீரைத் தக்க வைப்பதிலும் சிறந்து விளங்குகின்றன. இதன்காரணமாக உலகம் முழுவதும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை பெரும்பாக்கத்திலும் உலக சதுப்பு நிலக் குறியீடான ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி உள்ளது.

அதில், அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

”சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்குள், ஒரு அடுக்கு மாடி கட்டும் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு வனச்சட்டம், 1882-ன் கீழ் பள்ளிக்கரணை பகுதியில், சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக்காடாக 2007-ல் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1248 ஹெக்டேர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக்காட்டில் உள்ள 698 ஹெக்டேர் நிலமும் உரிய நடைமுறைகளுக்குப் பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 ஹெக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும். ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள நிலப்பகுதிகளை சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஊடகங்களில் குறிப்பிடப்படும் கட்டுமானம் குறித்த நிலத்தின் புல எண்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி தனியார் பட்டா நிலங்கள் ஆகும்.

இப்பணிகளை தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் தேர்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் எல்லைகளை வரையறுக்கும் பணி நவம்பர் 2024ல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஈரநில விதிகளின்படி பள்ளிக்கரணை ஈரநில அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்கள் பட்டா நிலங்கள் என்பதால், செய்தித்தாள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை.

மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தல எல்லை வரையறையானது, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் ஒப்பிட்டு பரப்பளவை வரையறுப்பது, நில உண்மை கண்டறிதல் சோதனை மற்றும் அறிவிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ராம்சர் தலம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has issued a statement denying reports that permission was granted for constructing apartment buildings in the Pallikaranai marshland areas in Chennai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in