சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 63,246 கோடியை வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 min read

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியதாகப் பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் மொத்தம் 118.9 கி.மீ. தூரத்துக்கு 128 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது. மாதவரம் முதல் சிப்காட் வரை (வழித்தடம் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (வழித்தடம் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (வழித்தடம் 5) என மூன்று வழித்தடங்களில் இந்தத் திட்டம் அமையவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது.

மொத்தம் ரூ. 63,246 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் மத்திய அரசு ரூ. 7,425 கோடி நிதி ஒதுக்குகிறது. ரூ. 33,593 கோடி கடன் மூலம் பெறப்படுகிறது. மீதமுள்ள ரூ. 22,228 கோடியை மாநில அரசு செலவிடுகிறது.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு நீண்ட நாள்களாக விமர்சனம் செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அவரிடம் வலியுறுத்தினார். இந்தச் சூழலில்தான் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, "தமிழ்நாடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.

அதேவேளையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மொத்த நிதியையும், அதாவது ரூ. 63,246 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

"சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ஒன்றிய அரசு தரப்பில் ரூ. 7,425 கோடி, தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ. 22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ. 33,593 கோடியும் பெறப்படும்" என்று தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in