

மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஆண்டுதோறும் கோடைக்காலச் சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 13 அன்று தேர்தலை முன்னிட்டு அடுத்த 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகை ரூ. 2,000 என மொத்தமாக ரூ. 5,000 மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் விமர்சனம்
இதனிடையே தேர்தல் காரணத்தால்தான் திமுக அரசு கோடைக்காலச் சிறப்புத் தொகையை வழங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில், இனி ஆண்டுதோறும் கோடைக்காலச் சிறப்புத் தொலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்றது. அப்போது கேள்வி பதில் நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைக்காலத்திற்கு ரூ. 2,000 கொடுத்துள்ளீர்கள். இரவோடு இரவாக தொகையை வரவு வைப்பது தேர்தல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் பேசுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலம் வருகிறது. அப்போதெல்லாம் வழங்கப்படவில்லையே. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பிறகு ஏன் முன்கூட்டியே கொடுத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆண்டுதோறும் கோடைக்காலச் சிறப்புத் தொகை
இதற்குப் பதிலளித்துப் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: கோடைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டுதான் ரூ. 2,000 கொடுக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் மக்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கியபோதும் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல் மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையிலும், திமுக அரசு அந்தச் சூழ்ச்சியை முறியடித்து மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. மேலும், இனி மகளிர் உரிமைத் தொகையுடன் ஆண்டுதோறும் கோடைக்காலச் சிறப்புத் தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
Minister Geetha Jeevan announced in the Legislative Assembly that a special summer allowance will now be paid annually along with the women's rights allowance.