அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Diwali Bonus |

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு...
அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Diwali Bonus |
2 min read

தமிழக அரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில்,

”பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சக்தியே ஒரு நாட்டை உயர்த்தும் என்பதையும், உற்பத்தியைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் இவர்களின் பங்கு முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்குமாறு முதலமைச்சர் மு.க, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015-ன் படி மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும். இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ. 7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி, அனைத்து சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்:

1. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையைக் கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

3. ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் சி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மொத்தம் 10% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.57% கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்.

6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு பொத்தம் ரூ. 376.01 கோடி ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் பணிபுரியும் அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும். எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in