
மழை வெள்ளப் பாதிப்பில் கல்விச் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்களை இழந்திருந்தால், அதைப் பெறுவதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. நிறைய வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தென் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பின் சேதம் மிக மோசமானதாக இருந்தது. இந்த வெள்ளப் பாதிப்பில் கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை வீணாகின.
பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்/கல்லூரி முதல்வர் மூலம் புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாடப் புத்தகங்களை இழந்திருந்தால், படிக்கும் பள்ளியின் மூலம் அவர்களுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ள தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேவைக்கேற்ப புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களைப் புதிதாகப் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர்களால் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிறப்பு முகாம்கள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.