
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரவில் பிரேதப் பரிசோதனை செய்தது சரியா என்பது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பரப்புரையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், சம்பவத்தன்று 39 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அவர்களது உடல்கள் உடனேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதி இல்லை என்ற விதிமுறை உள்ள நிலையில், எப்படி இரவில் பிரேதப் பரிசோதனை செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
”’கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேதப் பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது' என்று விதிமுறைகள் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
2021 நவம்பர் 15-ல் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது என்று சமூகவலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை 2021-ல் வெளியிட்ட அரசாணையும் இணைக்கப்பட்டுள்ளது.