ஆளுநரின் கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்காது: முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றம்! | Tamil Nadu Assembly |

"சட்ட முன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்தைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை."
ஆளுநரின் கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்காது: முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றம்! | Tamil Nadu Assembly |
2 min read

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு பற்றிய ஆளுநரின் கருத்துகளை தமிழ்நாடு சட்டப்பேரவையால் ஏற்றுக்கொள்ள இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்வதற்குத் தாங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை அழைத்துள்ளீர்கள். அவரும் தற்போது சட்ட முன்வடிவை அறிமுகம் செய்துள்ளார். இச்சட்ட முன்வடிவு சம்பந்தமாக ஒரு செய்தியை பேரவையின் முன் வைக்கிறேன்.

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவமானது, நிதிச் சட்ட முன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருகிற காரணத்தால், இந்தச் சட்ட முன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.

பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப் பெற்ற கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாகக் கருதப்படும் நிர்வாகத்தால், மக்கள் நல்வாழ்வுத் துறையால் வரைவு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டது. சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டது. சட்ட முன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதி, ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்ட முன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தங்களுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் இச்சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகப்படுத்தக்கூடிய நிலையில், பேரவையின் உறுப்பினர்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தங்களுடைய செய்தியில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கும் நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.

ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவோ, அதற்கான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளப்பட்டால், திருத்தங்களைத் திரும்பப் பெறவும் இல்லையெனில் வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.

இத்தகைய சட்ட முன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்தைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடமிருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இம்மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.

சட்டம் இயற்றுவது இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடமிருந்து வரப்பெற்றுள்ள கருத்துகள் அடங்கிய செய்தி, அவைக்குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சி மீது நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தால், அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை.

2025 தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவைப் பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவருடைய கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தைகள் அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது. அந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இதன்பிறகு, இந்தத் தீர்மானமானது சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

MK Stalin | Tamil Nadu Assembly | Governor | RN Ravi | Tamil Nadu Governor RN Ravi |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in